Pollachi - மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை... கண்டுகொள்ளாத வனத்துறை! - ஆனைமலை
பொள்ளாச்சி :ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு எருமை, யானை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள அட்டகட்டி மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாகவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை ஒன்று, அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து, அப்பகுதி மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் சென்று, தற்காத்துக்கொண்டனர். இந்த ஒற்றை காட்டு யானை அடிக்கடி குடியிருப்புக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும்; பலமுறை வனத்துறையினரிடம் கூறியும் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளாமலும் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையாக குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த ஒற்றைக் காட்டு யானையால் உயிர் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்கு முன்பே வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இந்த ஒற்றைக் காட்டு யானையை, இப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் மின்வாரிய குடியிருப்புகளை சுற்றி வன எல்லையில் அகழிகள் ஏற்படுத்தி யானை மற்றும் மற்ற வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.