நடிகர் சுதீப்பை காண குவிந்த ரசிகர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி! - சுதீப் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
கர்நாடகா: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் கன்னட நடிகர் சுதீப் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தொகுதி பாஜக வேட்பாளர் சிவன் கவுடாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக நடிகர் சுதீப் இன்று(மே.4) தேவதுர்கா நகருக்கு வந்தார். கலாபுரகியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேவதுர்காவுக்கு சுதீப் வந்திருந்தார். சுதீப்பின் வருகையையொட்டி, அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
அவரது ஹெலிகாப்டர் வந்தவுடன் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைக் காண முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். ரசிகர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றதால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையில், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய நடிகர் சுதீப், அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்துவிட்டு, காரில் ஏறி பிரசாரத்திற்கு சென்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' வெளியாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு!