காவல் நிலையத்தில் அடிதடி: கவுன்சிலரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகள் - நடந்தது என்ன? - ஆட்டையாம்பட்டி போலீசார்
சேலம்: வீரபாண்டி அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் ரேஷன் அரிசிக் கடத்தல் கொடிகட்டிப் பறப்பதாக கூறப்படுகிறது. ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கஞ்சா செந்தில், சத்யராஜ் ஆகிய இருவரும் ஆட்டையாம்பட்டி அடுத்த இனாம் பைரோஜ், மல்லசமுத்திரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து ஆட்டையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள கண்ணன் என்பவர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து, அந்தப் பகுதிக்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்தில் புகுந்து, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே காவலர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதில் 2 பேர் நிலைகுலைந்து கீழே விழுந்த காட்சிகளும், அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரின் மண்டையை உடைத்த காட்சிகளும், காவல் நிலையத்தில் உள்ளேயே கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபடும் ஏழு பேர் கொண்ட கும்பல், ஊராட்சி மன்ற தலைவரைத் தாக்கிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே கஞ்சா விற்பனை மற்றும் ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட நவீன், செந்தில், சத்யராஜ் ஆகிய மூவரை ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலைய வளாகத்தில் கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஊராட்சி மன்றத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.