தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 'குப்ரோ நிக்கல்' திருட்டு: 10 பேர் கைது! - cupro nickels stealing
தூத்துக்குடி:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில், கடந்த 10ஆம் தேதி, ஒரு கும்பல் கடல் வழியாக வந்து பொருள் வைப்பு அறையில் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 690 கிலோ குப்ரோ நிக்கல் (Cupro nickel) பைப்புகள் உள்ளிட்ட உதிரி பாகங்களை திருடி சென்றுள்ளது.
இது தொடர்பாக அனல்மின் நிலைய ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், இந்த திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதைனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்ட ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில், உள்ள முத்தையாபுரம், தெர்மல் நகர், பெரியசாமி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜெய பிரேம், மாசாண முத்து, மதன், பிரகாஷ், சுப்பிரமணி, குழந்தை பாண்டி, கணேசமூர்த்தி, அழகர், சந்தனராஜ், மாரிமுத்து என 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர், வேறு யாருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.