சேலம் விவசாய தோட்டத்தை சுற்று வளைத்த விஷ வண்டுகள்.. விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி..
Published : Dec 15, 2023, 8:52 PM IST
சேலம்:ஓமலூர் அடுத்த கருப்பூர் அருகே உள்ள செங்கரடு ஊராட்சி பகுதியில் திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு உள்ளது. இதிலிருந்து வெளியேறும் புகையால் 24 மணி நேரமும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருக்கும்.
இதனால் செங்கரடை ஒட்டி உள்ள வனப்பகுதிகளிலிருந்து வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை இந்த பகுதிக்கு வருவதில்லை.
ஆனால் திறந்த வெளிக் குப்பைக் கிடங்கை அடுத்துள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் விஷப் பூச்சிகள் அதிக அளவில் நுழைந்து, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், செங்கரடு பகுதியில் கந்தசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் இன்று (டிச.15) கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
கதண்டு கூடி எனத் தெரியாத விவசாயி கந்தசாமி அதனைக் கலைக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, நொடிப்பொழுதில் அந்த விஷ வண்டுகள் அவரைக் கடித்ததோடு, வெளியிலிருந்த மக்களையும் கடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஓமலூர் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி விஷ வண்டு கூட்டைக் கலைத்து வண்டுகளை அழித்தனர்.