பாமக தலைவர் அன்புமணி கைது எதிரொலி: திருப்பத்தூர் மாவட்டத்தில் டயரை கொளுத்தி சாலை மறியல்! - டயரை கொளுத்தி சாலை மறியல்
திருப்பத்தூர்:நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி என்.எல்.சி நிறுவனத்தை பாமக தலைவர் அன்புமணி தனது கட்சியினருடன் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறையினரை கல்வீசித் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாமக கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட பாமகவினரில் ஒருவர், டயரை தீயிட்டு கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 30 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
அதேபோல் நேதாஜி நகர் பகுதியில் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் கார் மற்றும் இரு சக்கர வாகன டயரை பாமகவினர் சிலர் தீயிட்டு கொளுத்தி சாலையில் வீசிச் சென்றனர். இந்நிலையில் அவ்வழியாகச்சென்ற காவலர் மற்றும் பொதுமக்கள் டயரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருப்பத்தூர் - சேலம் சாலையில் கற்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.