பாஜக நிர்வாகி மீது புல்டோசர் ஏற்றுவதா?... ஆட்சியரிடம் பாஜக நிர்வாகிகள் மனு - பாஜக நிர்வாகிகள் செல்வக்குமார் செகமலையப்பன்
திருப்பூர்:அவிநாசிபாளையம் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட பொங்களூர் பகுதியில் நீண்ட நாட்களாக மக்களின் பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாயை ஜேசிபி வாகனம் மூலம் அடைக்க முயன்ற, திமுகவினரை தட்டிக்கேட்ட பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது புல்டோசர் ஏற்றி, அவரை கொலை செய்ய திமுகவினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி புகார் அளித்ததன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் தெற்கு தாலுகா இடுவாய் கிராமம் பாரதிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக நிர்வாகிகள் செல்வக்குமார், செகமலையப்பன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் தாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினர் மீதான நெருக்கடியும் தாக்குதலும் அதிகரித்து வருவதால் தங்களின் சமூக வாழ்க்கையை சீராக வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; தங்களின் அச்சத்தை போக்குமாறு வலியுறுத்தியும் மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:"ஓட்டுக்கு காசு வேணாம்! அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க" - அரசியல் அட்வைஸ் சொன்ன விஜய்