சிசிடிவி: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி - Erode news
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் இன்று (மார்ச் 10) காலையில் பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேநேரம் பெருந்துறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்களான கபிலன் மற்றும் ஜெய் ஸ்ரீ பாலாஜி ஆகியோர், இருசக்கர வாகனத்தில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியேச் சென்ற தனியார் பேருந்தை ஞானப்பிரகாசம் முந்திச் செல்ல முயன்றுள்ளார். இந்த நேரத்தில் எதிரே வந்த கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனம் மீது, ஞானப்பிரகாசம் நேருக்கு நேர் மோதி உள்ளார். இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல் துறையினர், உயிரிழந்த ஞானப்பிரகாசத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் விபத்தில் படுகாயம் அடைந்த கபிலன் மற்றும் ஜெய் ஸ்ரீ பாலாஜி ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.