மதுபோதையில் திருநங்கை மீது தாக்குதல்.. வைரல் வீடியோ! - Dindigul news
திண்டுக்கல்: கொடைரோடு ரயில் நிலையம் அருகே மது போதையில் உள்ள இரண்டு ஆண்கள், அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது மட்டுமல்லாமல், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இவ்வாறு வெளியான இந்த சிசிடிவி காட்சிகளில், மது போதையில் இருக்கும் இரண்டு ஆண்களில் ஒருவர், அவ்வழியே சென்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரின் ஆடையை பிடித்து இழுத்து, அவரை கீழே தள்ளுகிறார். பின்னர் அந்த திருநங்கையை காலால் எட்டி உதைக்கிறார்.
தொடர்ந்து, எழுந்து செல்லும் திருநங்கையை துரத்திய நபர், அவரின் தலை முடியை பிடித்து மீண்டும் அடிக்கத் தொடங்குவதாக இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அம்மநாயக்கணூர் காவல் துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், இது தொடர்பாக கொடைரோடு அருகே இருக்கும் மாவுத்தான்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்ராஜாவை அம்மயநாயக்கணூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வீடியோ வைரலான 1 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.