மீண்டும் சோகம்.. மாடு முட்டியதில் நிலைத்தடுமாறி ஓடும் பேருந்தினுள் விழுந்த நபர் உயிரிழப்பு!
Published : Nov 20, 2023, 7:58 PM IST
நாகப்பட்டினம்:சாலையில் நடந்து சென்றவரை மாடு முட்டியதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கோட்டைவாசல் படி பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை - நாகூர் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிந்து வருகின்றன.
குறிப்பாக நாகை-நாகூர் பிரதான சாலை, ஆட்சியர் அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், சாலையின் நடுவே படுத்துக் கொள்வதாலும், குறுக்கே சுற்றித் திரிவதாலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும், சாலையின் நடுவே நின்று மாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் உறங்குவதால் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நாகை மேல கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் சபரிராஜன் (வயது 55) என்பவர் மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தவழியாக சென்ற மாடு அவரை முட்டியது.
இதில் நிலை தடுமாறிய சபரிராஜன் கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகை டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாடு முட்டி சபரிராஜன் சாலையில் நிலைதடுமாறி பேருந்து சக்கரத்தின் இடையே சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.