ஊழல் நிறைந்த பல்கலைக்கழகம் பெரியார் பல்கலைக்கழகம் - பேராசிரியர் இளங்கோவன் - Periyar University Workers Association meeting
சேலம்: பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 19) சேலத்தில் நடைபெற்றது. இந்த சங்கத்தின் தலைவர் கனிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன், “பெரியார் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும், அனைத்து பதவிகளிலும் ஊழல் நடைபெறுகிறது.
இதனை முழுமையாக விசாரித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும். நேரடியாக அமைச்சரே ஊழல்கள் குறித்தும், முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலைக்கழகம், ஆதிக்க சாதியினரின் பிடியில் உள்ளது. அவர்களின் சாதிய ஆதிக்கம், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் வன்மத்தை பிரதிபலிக்கும் ஒரு கல்விக்கூடமாக அமைந்துள்ளது.
அண்மையில், தங்களது நியாயத்தை முன் வைத்த வரலாற்றுத் துறை மாணவிகள் நான்கு பேரின் மாற்றுச் சான்றிதழில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்காலம் ஓராண்டு காலமாக வீண் ஆனதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், வரலாற்றுத் துறைத் தலைவர் ஆகிய மூன்று பேருமே பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்தார். முன்னதாக, பெரியார் பல்கலைக்கழகம் ஊழல் நிறைந்த பல்கலைக்கழகமாக திகழ்வதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.