வடமாநிலத் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய பெரம்பலூர் எஸ்.பி! - Perambalur DSP celebrates Holi
பெரம்பலூர்: நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்த அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி, அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, "நீங்கள் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தை விட்டு வேலைக்காக எங்கள் தமிழ்நாட்டை நம்பி வந்திருக்கிறீர்கள். உங்களை பாதுகாப்பது எங்கள் காவல் துறையில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். யாரோ சில விஷமிகள் தமிழ்நாட்டு மக்கள் மீது பொய் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை நீங்கள் ஒருபோதும் நம்பாதீர்கள்.
உங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பது எங்கள் காவல் துறையின் கடமையாகும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். எங்கள் மாநில முதலமைச்சர், காவல் துறை இயக்குநர் மற்றும் எங்கள் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை ஆகியோர், எங்கள் தமிழ்நாட்டை நம்பி வந்த உங்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை whats app மூலமாகவோ, போன் மூலமாகவோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் தெரியப்படுத்துங்கள்.
உங்களுக்கு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால் துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி - 9489238665, மாவட்ட காவல் அலுவலகம் - 9498100690, காவல் கட்டுப்பாட்டு அறை - 9498181225 மற்றும் பாடாலூர் காவல் நிலையம் - 9498100693 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவித்தார்.