மின்னும் பனிச் சாலை! கோவையில் கடும் பனி மூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி!
Published : Dec 22, 2023, 10:32 AM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்கு பருவ மழையைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இதனால் குளிர்ச்சியான சிதோசன நிலை நிலவி வருகிறது. மேலும் பகல் முழுவதும் மேக மூட்டத்துடனும், இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அன்னூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் இன்று (டிச. 22) அதிகாலை முதலே கடுமையான பனி மூட்டம் நிலவியது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு புலப்படாத அளவிற்கு கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால் கரூர் - மைசூர் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே சென்றன.
தற்போது சாலையில் செல்லும் வாகனத்தை வாகன விளக்குகளை வைத்து அடையாளம் காண முடிவதாகவும், இல்லையெனில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உருவாகும் எனவும், இதனால் கடும் சிரமம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.