பிரியாணி தினத்தில் தொடங்கப்பட்ட பிரியாணி கடை : ரூ.10-க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் குவிந்த மக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி புது தாராபுரம் சாலையில் இன்று(ஜூலை 2) புதிதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. பிரியாணி தினத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையின் தொடக்க விழாவையொட்டி, முதல் 300 நபர்களுக்கு 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் அறிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால் தொலைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்யபட்டது. அதன்படி, இன்று மதியம் சிக்கன் பிரியாணி பார்சலாக வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக, கடையின் முன்பு ஏராளமானோர் குவிந்தனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பத்து ரூபாயுடன் வந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். முதல் 300 நபர்களுக்கு 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட பின்பும் கூட்டம் அதிகமானதால், பாதி விலைக்கு பிரியாணி விற்கப்பட்டது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தால் பொதுமக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காகவே பத்து ரூபாய் நோட்டுகளுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்ததாக கடை உரிமையாளர் ஷேக் தெரிவித்தார்.