செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்.. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..
வேலூர்:முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் பர்மா காலணி வீடுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனிநபர் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் ஏர்டெல் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரத்தை அமைக்க கம்பத்தை அந்த வீட்டின் மீது போட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வசந்தபுரம் பர்மா காலணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வசந்தபுரம் பகுதியிலிருந்து வேலூர் செல்லும் பொதுமக்கள் சாலை மறியலால் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தெற்கு காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி செல்போன் கோபுரத்தை பாழடைந்த கட்டடத்தின் மேல் இருந்து அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக சாலை மறியல் ஈடுபடவுள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.