Video:ஊட்டியில் உலா வரும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - நீலகிரி வனத்துறை
நீலகிரி:நீலகிரி மாவட்டம், எமரால்டு சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவை குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்துக் காணப்படுகிறது.
அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புலி, கரடி, யானைகள், வரையாடுகள் உள்ளிட்டப் பல வன விலங்குகள் உணவுக்காக நுழைந்து வருகின்றன. இதனால், சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் உலா வந்தது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகிய இந்த சிறுத்தையின் நடமாட்டம் குறித்த காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும்; பாதுகாப்பாக இருக்கும் படியும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊருக்குள் நுழைந்த இந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.