விஜயின் அரசியல் வருகையை எதிர்பார்க்கிறதா தமிழ்நாடு? - பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், இன்று (ஜூன் 22) தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நள்ளிரவு படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து உள்ளது.
அது மட்டுமல்லாமல், இன்று லியோ படத்தின் முதல் பாடலையும் படக்குழு வெளியிட உள்ளது. அதிலும், இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கிறது. இதனிடையே, திரைப்படங்களில் அரசியல் வசனங்களையும், விழா மேடைகளில் மறைமுகமான அரசியல் பேச்சுகளையும் வெளிக்காட்டி வரும் விஜய், முழு நேர அரசியலுக்கு வருவாரா என்பதே தற்போதைய விவாதமாக உள்ளது. அதிலும், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளில் இருந்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் நேரில் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய விஜய், நாளைய வாக்காளர்கள் என மாணவர்களையும், அந்த மாணவர்கள் பெற்றோரிடத்தில் பணம் பெற்றுக்கொண்டு வாக்கு அளிக்கக் கூடாது என வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு விஜயின் அரசியல் களம் சூடுபிடிக்க, லியோ பட பாடலோ ‘நான் ரெடி’ எனத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகை மக்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் ஆவணப்படுத்தி உள்ளது.