ஆடிப்பெருக்கு விழா: பாரம்பரியப்படி மாட்டு வண்டிகளில் கிளம்பிய கிராம மக்கள்! - aadi 18
திருவண்ணாமலை: தமிழ் மாதத்தில் ஆடி மாதம் என்பது தெய்வீக மாதமாக போற்றப்படுகிறது. இம்மாதத்தில் வரும் பதினெட்டாம் நாள் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீருக்கு மக்கள் மலர் தூவி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதில் தங்களுக்கு பஞ்சமில்லாத வாழ்வு தர வேண்டும் என இறைவனை வேண்டி நீருக்காக பூஜை நடத்தப்படும் நாள் தான் இந்த ஆடிப்பெருக்கு விழா என்று கூறுகின்றனர்.
புதியதாக திருமணமாகி தல ஆடி கொண்டாடுபவர்களுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் இந்த தினத்தில் தாலி கயிற்றை பிரித்து புதிதாக மாற்றும் நிகழ்ச்சியும் கொண்டாடப்படுகிறது. இதனால் அவர்கள் கணவரின் ஆயுட்காலம் கூடும் என்பது நம்பிக்கை.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருநாளில் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் நடுவே உள்ள சென்னம்மாள் ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபட ஆடு, கோழிகளுடன் சுமார் 50 இரட்டை மாட்டு வண்டி மற்றும் 50 டிராக்டர்களுடன் ரேடியோ கட்டிக்கொண்டு அம்மனை வழிபட புறப்பட்டுச் சென்றனர்.