ஆடி அமாவாசை: தர்ப்பணம் செய்ய குற்றாலத்தில் குவிந்த மக்கள்!
தென்காசி:ஆடி மாதம் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் 3 அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதாவது தை மாதத்தில் வருகிற அமாவாசையும், புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசையும், ஆடி மாதத்தில் வருகிற அமாவாசையும் என 3 அமாவாசைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
தர்ப்பணத்திற்கு முக்கியமாக ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆடி மாத பிறப்பு தினத்தன்று இன்று அமாவாசை தினமும் வந்திருப்பதால் இன்றையை தினம் மிகவும் சிறப்பு எனக் கூறுகின்றனர். இந்த நிலையில், புண்ணிய தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகமாக உள்ளது.
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என குற்றாலத்திற்கு அதிகப்படியாக வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் அதிகாலை முதலே சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து குற்றாலத்தில் தர்ப்பணம் கொடுத்தனர். இன்று அதிகாலை தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் அருவி பகுதியில் குவிந்தனர்.
அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர், நட்சத்திரம் போன்ற விபரங்களை கூறி எள்ளும், தண்ணீரும் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். அதிகக் கூட்டம் காரணமாக மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளும், தர்ப்பணம் கொடுத்தவர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.