உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் கோயிலில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம்! - today latest news
Published : Nov 20, 2023, 8:16 AM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தன் மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் என்பதால் இது அட்ட விரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டிச் சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரதி சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற காரணங்களினால் இக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், வருடம் முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். பல்வேறு சிறப்புகளையுடைய இந்த கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து சிறப்புப் பூஜைகள் செய்தும் ஹோமங்கள் செய்தும் வழிபட்டுச் செல்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று (நவ 19) ரஷ்யா நாட்டை சேர்ந்த ஏழு சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வந்திருந்தனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோ பூஜை, கஜ பூஜை செய்த அவர்கள், கோயிலுக்கு உள்ளே சென்று கள்ள வர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.