பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டினை சேர்ந்தவர்கள் சிறப்பு யாகம்!
திண்டுக்கல்:பழனி தண்டாயுதபாணி சுவாமியின் நவபாஷண சிலையை உருவாக்கியவர் போகர் சித்தராவார். அவரின் சீடரான புலிப்பாணி பாத்திர சுவாமிகளின் ஆசிரமம் சார்பில், பழனி மலைக்கோவிலில் வருடந்தோறும் கொண்டாடப்படும் போகர் ஜெயந்தி விழா மே 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதில் விலைமதிப்பற்ற பச்சை மரகதலிங்கத்திற்கும், போகர் பெருமான் வழிபட்ட புவனேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அர்ச்சனை மற்றும் அபிசேக பூஜைகள் மே 18 மதியம் 11 மணியளவில் துவங்கி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த "பாலகும்ப குருமுணி ஆதினம்" தலைமையில் ஆன்மிக குழு ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு விஜயம் செய்து வருகிறது.
அதன்படி பழனி போகர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இன்று புலிப்பாணி ஆசிரமத்தில் உலக மக்கள் அமைதிக்கும் சிறப்புக்கும், சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.