திருப்பத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மோதல்! - Sundarampalli grama sabha meeting
Published : Oct 3, 2023, 10:49 AM IST
திருப்பத்தூர்:கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 5 மற்றும் 7வது வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
ஐக்கிய ஜனநாயக கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவருக்கும் கேள்வி எழுப்புவதில் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் திடீரென இருவருக்கும் இடையே தகராறாகி கிராம சபை கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் மோதி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட இருவரையும் கந்திலி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.