அசரீர் மலை முருகர் கோயிலை அறநிலையத்துறை எடுக்கத் தொடரும் எதிர்ப்பு - திரும்பிச்சென்ற அதிகாரிகள்! - temple to undertake Hindu Religious Charities
வேலூர்: காட்பாடி அடுத்த 66 புத்தூர் கிராமத்தில் அசரீர் மலையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கோயிலுக்கு அறங்காவலர் குழுத் தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் நடந்தது. அதில் இரு தரப்பினரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் இரண்டாவது கட்டமாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் நடந்தது. இதற்கு 66 புத்தூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு, கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் நேற்று மாலை(ஜூலை 10) இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கோயிலை கையகப்படுத்தச் சென்றனர். அப்போது கோயிலை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலைந்து சென்றனர்.