திரேஸ்புரம் துறைமுகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.. மீனவர்கள் மகிழ்ச்சி! - Country Boat
Published : Dec 16, 2023, 1:58 PM IST
தூத்துக்குடி: நாளை மார்கழி மாதம் பிறக்க உள்ள நிலையில், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாக நாட்டுப் படகு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (டிச.16) முதல் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள், இன்று அதிகாலை திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில், நாளை (டிச.17) மார்கழி மாதம் பிறக்க உள்ளதால், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும், இங்கு மீன்களுக்கு நடைபெற்ற ஏலத்தில் நல்ல விலை கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் ஷீலா மீன் ஒரு கிலோ ரூ.800 வரையிலும், விளை மீன், பாறை, ஊளி மீன் ஆகியவை கிலோ ரூ.400 வரையிலும், சூரை மீன் கிலோ ரூ.250 வரையிலும் விற்பனையானது. சாலை மீன் வரத்து குறைவு காரணமாக கூடை ரூ.1,500 முதல் 1,800 வரையில் விற்பனையானது.