மூன்று மாதங்களாக குடிநீர் பிரச்சனை, ஆபத்தான நிலையில் மின் கம்பம்.. மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!
Published : Oct 23, 2023, 5:47 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர்ப் பகுதியில் பகுதியில், கடந்த மூன்று மாதங்களாகச் சரிவரக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், அப்பகுதியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் மின்சார கம்பத்தைச் சீரமைக்கவும் பல முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் திருமால் நகர் மக்கள் தரப்பில் கூறப்படிகிறது.
இந்நிலையில், இன்று (அக்.23) சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன், திருவண்ணாமலை பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் லதா என்பவர் கூறுகையில், திருமால் நகர்ப் பகுதியில் மூன்று மாதங்களாகக் குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை கோரிக்கை முன்வைத்துள்ளோம், குறிப்பாக அக்டோபர் 2 நடைபெற்ற கிராம சபா கூட்டத்திலும் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.