சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த ஒற்றைக்காட்டு யானையால் பரபரப்பு! - பாலிகானப் பள்ளி பகுதி
கிருஷ்ணகிரி:பாலிகானப்பள்ளி பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை நேற்று காலை (மே 31) ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அவ்வாறு இடம் பெயர்ந்த ஒற்றைக்காட்டு யானை அச்சுறுத்தும் வகையிலும் ஆக்ரோஷத்துடனும் காணப்படுகிறது. எனவே, யானையிடமிருந்து சுற்றுப்பகுதி கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், யானையை கண்டால் தகவல் அளிக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனெனில் யானையை காணும் பொது மக்கள் அதன் ஆபத்து குறித்து அறியாமல் அதனை புகைப்படம் எடுத்து மகிழும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. மேலும், இத்தகைய ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
எனவே, சானமாவு வனப்பகுதி ஒட்டிய பீர்ஜேப்பள்ளி, போடூர், ஆழியாளம், பாத்தக்கோட்டா, ராமபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கோ, விறகு சேகரிக்கவோ வனப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதனை தொடர்ந்து, ஒற்றைக்காட்டு யானை ஆக்ரோஷமாக காணப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நிலங்களைச் சேதப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, யானையைக் கண்டால் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உணவக பார்க்கிங்கில் நுழைந்த காட்டு யானைகள்: அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்...