வேலவனை தேடி வந்த மயில் மற்றும் சேவல்... அரோகரா என்று முழக்கம்! - திருவண்ணாமலையில் நடைபெற்ற சூரசம்காரம்
Published : Nov 21, 2023, 6:26 PM IST
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தையடுத்த ரெட்டிபாளையம் திருமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையினால் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் பெருகி வருகிறது. தொடர்ந்து மலை உச்சியில் உள்ள கோயில் வரை வாகனங்கள் செல்ல வசதியாக உள்ளதனாலும், விழாக்காலங்கள் மட்டுமின்றி தினசரி பக்தர்கள் இந்தக்கோயி்லுக்கு வருகை தருவதனால் சுற்றுலாத்தளம் போலவும் காட்சியளிக்கிறது.
இக்கோயிலில் கடந்த 13ஆம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து சூர பத்மன் இறக்கும் தருவாயில் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும் உருப்பெற்று அவை முருகனின் கொடியாகவும் வாகனமாகவும் திகழ வேண்டும் என வரம் கேட்டதாக ஆன்மீக வரலாறு கூறுகின்றது.
இக்கோயிலில் சூரசம்காரம் முடிந்து மறுநாள் முருகன் திருக்கல்யாணம் மஞ்சள் தாலி(மாங்கல்யம்) உள்ளிட்ட சீர்வரிசைகளோடு வைத்து திருக்கல்யாணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பக்தர்களுக்கிடையே சேவல் ஒன்றும், மயில் ஒன்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி இருபுறமும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது. இதனைக்கண்ட ஆச்சரியமடைந்த பக்தர்கள் அரோகரா என கோஷங்கள் முழங்க வழிபட்டுச் சென்றனர். தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.