மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை... ஆதங்கத்தில் கலெக்டர் வாகனம் முற்றுகை
திருப்பத்தூர்:திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இந்நிலையில் அங்கு சாலை அமைத்து தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அதன் அடிப்படையில், அங்கு சாலை அமைக்கக்கோரி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து நிலத்தடி நீரை அதிகரிக்க பெரும்பாலான பகுதிகளில் போடப்படும் பேவர் பிளாக் சாலை 210 மீட்டருக்கு அமைக்கப்பட்டது. இந்த சாலையை அமைக்கும்போது நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல், அதைச் சுற்றியே சாலையை அமைத்துள்ளனர்.
மேலும், இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், பேவர் பிளாக் கல் கையால் உடைத்தாலே தூள் தூளாக நொறுங்கும் அளவிற்கு உள்ளது. சாலையை தரமற்ற முறையில் அமைத்ததற்கும், நடுவில் இருந்த மின் கம்பத்தை அகற்றாததற்கும் அப்பகுதி மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது ஆண்டியப்பனூர் அணை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். இதை அறிந்த பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க:அரசு திட்டப்பணிகள்; துரிதமாக முடிக்க அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச்செயலர் உத்தரவு!