Chithirai Festival; மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் - Queen of Madurai
மதுரை:உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் பல வாகனங்களில் மீனாட்சி அம்மனும் சுவாமி சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் 8ஆம் நாளான இன்று (ஏப்.30) 'மீனாட்சி பட்டாபிஷேகம்' மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இரவு 7.05 மணியிலிருந்து 7.29 மணிக்குள் பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றது. கோயிலின் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார். விருச்சிக லக்னத்தில் சிறப்பு பூஜைகளுடன் பட்டாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன.
வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிவித்து, ரத்தினக் கற்கள் பதித்த செங்கோல் மீனாட்சியம்மனிடம் வழங்கப்பட்டது. மதுரையின் அரசியாக மீனாட்சியம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியம்மன் ஆட்சியும் ஆவணி முதல் சித்திரை மாதம் வரை சுந்தரேஸ்வரர் ஆட்சியும் நடைபெறுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, அம்மனும் சுவாமியும் வீதி உலா வந்தனர். இதனிடையே, மாசி வீதிகளில் பக்தர்கள் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டனர். நாளை திக்விஜயமும், மே 2ஆம் தேதி திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி திருத்தேரோட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.