தூத்துக்குடியில் அரசு பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ! - திருநெல்வேலி
Published : Jan 9, 2024, 8:00 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் பேருந்தின் மேல் பகுதியிலிருந்து ஒழுகிய நிலையில் அதில் பயணித்த பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடை பிடித்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 08) காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 7 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டது.
இந்நிலையில், பேருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்ற போது மழை பொழியத் தொடங்கியுள்ளது. சில நேரம் களித்து மழையின் வேகம் அதிகரித்தால் பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியுள்ளது.
இதனால், பேருந்தில் பயணித்த சில பயணிகள் நனைந்து கொண்டே பயணித்துள்ளனர். சிலர் மழையில் நனையாமல் இருக்க தங்கள் கைகளில் வைத்திருந்த குடைகளைப் பேருந்திற்குள்ளேயே பிடித்தபடி பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், அரசு பேருந்தில் குடை பிடித்து பயணம் செய்யும் பயணிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.