விநாயகர் சதுர்த்தி எதிரொலி.. முதல்முறையாக துணை ராணுவத்துடன், போலீசார் கொடி அணிவகுப்பு! - செங்கோட்டை செய்தி
Published : Sep 3, 2023, 10:20 AM IST
Vinayagar Chathurthi : தென்காசி: விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு முதல் முதலாக துணை ராணுவ படையினரும், தமிழக காவல் துறையினரும் ஒன்றிணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பதற்றத்தை தவிர்க்க துணை ராணுவ படையினரும், தமிழக காவல்துறையினரும் ஒன்றிணைந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு செங்கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மிகப்பெரிய மதக் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரமானது செங்கோட்டை நகரப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டிய நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வருகிற 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் துணை ராணுவ படையினரும், தமிழக காவல்துறையினரும் ஒன்றிணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பில், 45 துணை ராணுவ படைவீரர்கள் உள்பட 105 காவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில், வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தினர்.