பாளையங்கோட்டையில் 11 அம்மன் சப்பர பவனி கோலாகலம்! - palayamkottai news
Published : Oct 26, 2023, 8:35 AM IST
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவை ஒட்டி, 11 அம்மன் சப்பரங்களுடன் வீதி உலா வந்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் தசரா விழா கடந்த 14ஆம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், முப்பிடாதி அம்மன், வடக்கு முத்தாரம்மன், தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்ம உச்சினிமாகாளி, உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில்களில் தசரா திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில், தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.
10ஆம் திருநாளான விஜயதசமியையொட்டி, 11 அம்மன் கோயில்களிலிருந்து சப்பரங்களில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, 8 ரதவீதிகளில் உலா வந்து, நேற்று காலையில் ராமசாமி கோயில் திடலில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்பாளுக்கு புடவை, பழ வகைகள் வாங்கி வைத்தும், தேங்காய்கள் உடைத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர். இதனையடுத்து நேற்று (அக்.25) இரவு மாரியம்மன் கோயில் திடலில் மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.