கொடைக்கானல் மலைப் பகுதியில் கனமழை எதிரொலி.. பழனி வரதமாநதி நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி! - Varathamanathi Dam filled with rain
Published : Sep 3, 2023, 12:58 PM IST
திண்டுக்கல்:கோடைமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பழனி வரதமாநதி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரதமாநதி அணை. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பருவமழை காரணமாக வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வரதமாநதி அணையின் முழு கொள்ளளவான 67 அடியில், நீர் நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற துவங்கி உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 120 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் ஆயக்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
வரதமாநதி அணை நிரம்பியதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் ஆயக்குடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரதமாநதி அணை தண்ணீரை பயன்படுத்தி 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், வரதமாநதி அணை நிரம்பியதால், பழனி மற்றும் ஆயக்குடி கிராமத்திற்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் பயன்படுகிறது.
பருவமழை துவங்கும் முன்பாக வரதமாநதி நீர்தேக்கம் நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு வரதமாநதி அணை நிரம்பியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.