பழனி மலைக்கோயில் கருவறை மூலவரை வீடியோ எடுத்த விவகாரம்; சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட கோயில் நிர்வாகம்! - audio issue
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, திருக்கோயில் ஊழியர்கள் தனது மகளைத் தொட்டு தள்ளினார்கள் என குற்றம் சாட்டி ஈரோட்டு மாவட்டம் சித்தோடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த சம்பவம், தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதில் ஜூலை 9ஆம் தேதி மாலை 6.39மணியளவில் கருவறையில் உள்ள மூலவரை சாமி தரிசனம் செய்ய சம்பந்தப்பட்ட அந்த குடும்பத்தினர் வந்தபோது, கருவறையை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோ எடுப்பதும், அதை திருக்கோயில் ஊழியர் சிவா என்பவர் தடுத்து எச்சரித்ததும் தெளிவாக தெரிகிறது.
ஆனால் இந்த உண்மையை மறைத்து பெண்ணின் தந்தை தவறான செய்தியை பரப்பியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், பழனி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அடிக்கடி மூலவரை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுவதால் இதுபோல் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே இதற்கு தீர்வு காணும் விதமாக, பழனி கோயில் நிர்வாகம் ஏற்கனவே பக்தர்களிடம் செல்போனை வாங்கி வைக்க ஏற்பாடுகளை செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் வைத்திருந்தது. இதனால் திருப்பதியை போல் செல்போனை கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.