பொங்கல் தொடர் விடுமுறையால் பழனி முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம்! - பொங்கல்
Published : Jan 14, 2024, 5:57 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா வருகிற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போதிலிருந்தே முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் கரும்புத் தொட்டில்கள் எடுத்தும் பல்வேறு விதமான நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 3 மணி நேரம் வரையிலும், இலவச தரிசனம், சிறப்பு கட்டண வழி தரிசனம் மூன்று மணி நேரம் வரையிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் மணப்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தும் காட்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. தொடர் விடுமுறையால், பழனி கோயிலில் 5 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.