பாபநாசத்தில் வீட்டிற்குள் ஜோடியாக உலா வந்த கரடிகள்.. வைரலாகும் சிசிடிவி காட்சி! - சிசிடிவி கேமரா
Published : Jan 10, 2024, 11:27 AM IST
திருநெல்வேலி: பாபநாசம் அருகே உள்ள கோட்டைவிளைபட்டி கிராமத்தில், வீட்டின் வளாகத்திற்குள் இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வந்த காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அடுத்த பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, மிளா உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, கால்நடைகள் மற்றும் பொதுமக்களை தாக்கவும் செய்கின்றன.
இந்நிலையில்,நேற்றைய முன்தினம் (ஜன.8) பாபநாசம் அருகே கோட்டைவிளைபட்டி கிராமத்தில் வசிக்கும் வைகுண்டம் என்பவர் வீட்டின் வளாகத்தில், நள்ளிரவில் 2 கரடிகள் சுற்றித் திரிந்துள்ளன. இந்த சம்பவமானது, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக, கோட்டைவிளைபட்டி கிராமத்தில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை ஒற்றை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது. ஒற்றையாகவும், குட்டியுடனும் கரடி சாலையில் சுற்றித்திரிந்த நிலையில், தற்போது இரு கரடிகள் ஜோடியாக வீட்டின் வளாகத்தில் சுற்றித் திரிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.