அடடே..! இது புதுசா இருக்கே.. வாடிக்கையாளர்களுக்கு ஓவியத்தை பரிசாக வழங்கிய அரூர் துணிக்கடை! - இசைஞானி இளையராஜா
Published : Nov 11, 2023, 6:02 PM IST
தருமபுரி: அரூர் பகுதியில் ஏராளமான துணிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தீபாவளியை முன்னிட்டு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இலவச பொருட்கள், தள்ளுபடி விலையில் துணி எனக் கடை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இங்குள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், சென்னை போன்ற பெருநகரங்களைப் போலவே, துணி எடுக்கும் வாடிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகளுக்குக் கையில் மருதாணி போட்டு விடுவதும், வாடிக்கையாளர்களின் ஓவியங்களை வரைந்து அவர்களுக்குப் பரிசு அளிப்பதுமாக அசத்தி வருகிறது.
இதில், மாசேத் என்ற ஓவியர் துணிக் கடையில் துணி எடுக்கும் வாடிக்கையாளர்களை, அவர்கள் கண் முன்னே 10 நிமிடத்தில் அழகிய கருப்பு, வெள்ளை ஓவியமாக வரைந்து, தன் கையொப்பமிட்டு இலவசமாக வழங்கி வருகிறார். இது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்காக, கடை உரிமையாளர்கள் ஓவியருக்கு உண்டான தொகையைச் செலுத்தி விடுகின்றனர். இதன் மூலம், கடந்த பத்து தினங்களாக ஓவியருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பிரபல ஓவியரான இந்த மாசேத் இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்களுக்குத் தான் வரைந்த ஓவியங்களை நேரில் வழங்கி பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.