தேனியில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின - முதல் போக நெல் சாகுபடி நடவுப் பணிகள் தீவிரம்!
Published : Oct 21, 2023, 12:05 PM IST
தேனி: பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால் கண்மாய்களில் நீர் நிறைந்த நிலையில், முதல் போக நெல் சாகுபடி நடவு பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பாக விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்யாத நிலையில் கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கண்மாய்களில் நீர் நிறைந்துள்ளது.
பெரியகுளம் பகுதியில் வடகிழக்கு பருவமழையின்போது கண்மாய்கள் நிறைந்து, அதன் பின்பு கண்மாய் நீரைப் பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில், தற்பொழுது தொடர் மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிறைந்துள்ளதால், ஒரு மாதத்திற்கு முன்பாகவே நெல் நடவு பணிகளுக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்துள்ளது. இதனால், பெரியகுளம் பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி நடவுப் பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.