"இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்" - வைத்திலிங்கம்! - ஈபிஎஸ் மீது வைத்திலிங்கம் தாக்கு
தருமபுரி:தருமபுரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று (மே 19) நடைபெற்ற கூட்டம் ஒன்றில், சட்டப்பேரவை உறுப்பினர் வைத்திலிங்கம், பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம், "அண்ணா திமுக சட்ட விதிகளின்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். எடப்பாடி தரப்பினர் இயற்றிய தீர்மானங்கள் எல்லாம் சட்டத்திற்கு விரோதமானது, நியாயத்திற்கு புறம்பானது.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டு நாயகன் என ஓபிஎஸை புகழ் பாடியவர் எடப்பாடி பழனிசாமிதான். அதை வேண்டுமென்றால், திரும்பவும் நாங்கள் ஒரு முறை வீடியோவை போட்டு காட்டுவோம். சட்டம், நீதி, மக்கள் என அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுகவில் இருந்து வந்தவர். அவர் திவாகரன் வீட்டில் வேலை செய்தவர். எங்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை. அவரது சொந்த தொகுதியான மன்னார்குடியில் போட்டியிடட்டும். அங்கு போட்டியிட்டால் அவர் டெபாசிட் இழப்பார்.
கட்சிக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது என யாரும் கூற முடியாது. எப்போது வேண்டுமானாலும், நாளைக்கே கூட இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அன்வர் ராஜா, கே.சி.பழனிசாமி, சைதை துரைசாமி என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும். இதுதான் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவு. ஆனால், எடப்பாடி பழனிசாமி, தான் மட்டும் தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். தனக்கே கட்சியை உரித்தாக்கி கொள்ள வேண்டும் என திட்டமிட்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனக்குத்தானே 'ஜல்லிக்கட்டு நாயகன்' பட்டம் சூட்டிய ஓபிஎஸ்! - ஜெயக்குமார் சாடல்