Ooty Mountain Train: தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவையில் பாதிப்பு! - நீலகிரி செய்திகள்
நீலகிரி:உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகச் சாரல் மழையுடன் காற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூர் உதகையிடையே வெலிங்டன் பகுதியில் ராட்சத மரம் ரயில் பாதையில் விழுந்தது. இது குறித்து ரயில்வே துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அடுத்து விரைந்து வந்த ரயில்வே துறையினர் ரயில் பாதையில் கிடந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்குப் பின் மரத்தை முழுவதுமாக அகற்றி ரயில் போக்குவரத்தைச் சீர் செய்தனர். இதன் காரணமாகக் காலை 9.20 மணிக்கு உதகை செல்ல வேண்டிய மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 10.45 மணி அளவில் உதகை சென்று சேர்ந்தது.
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாலும், ரயில் தாமதமாக உதகை சென்றடைவதாலும் குறிப்பிட்ட நேரத்திற்குச் சுற்றுலா தளங்களுக்குச் செல்ல முடிவதில்லை என்றும், இதன் காரணமாக உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் செல்ல முடியாமல் பாதியில் திரும்பும் நிலை ஏற்படுகிறது என்று சுற்றுலாப் பயணியர் கூறியுள்ளனர். மேலும் நீலகிரி ரயில் பாதையில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.