ஒட்டன்சத்திரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ஓராண்டு நிறைவு..அமைச்சர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! - saplings planted
Published : Dec 24, 2023, 9:03 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டைப் பகுதியில் திருவேங்கடநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 117 ஏக்கர் நிலத்தில் கடந்த ஆண்டு 23.12.2022 அன்று உலக சாதனை நிகழ்ச்சியாக 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.
இந்நிலையில், உலக சாதனைப் புரிந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து மரக்கன்றுகளைப் பராமரிக்கும் 80க்கும் மேற்பட்டோருக்குப் புத்தாடை, பரிசுப்பொருள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.