சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி; தொடரும் அவலம்.. மாநகராட்சியின் பதில் என்ன? - மாடுகள்
Published : Jan 10, 2024, 4:35 PM IST
சென்னை: சென்னை அடுத்த நங்கநல்லூர் ஸ்டேட் பங்க் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நேற்று மாலை (ஜன.09) அதே பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு எருமை மாடுகள் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தன.
அதில் ஒரு எருமை மாடு திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த சந்திரசேகரை முட்டியது. இதனால் படுகாயம் அடைந்த சந்திரசேகரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழவந்தாங்கல் காவல் துறையினர் சந்திரசேகரின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை வாகனங்கள் மூலம் பிடித்துச் செல்லப்பட்டது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எத்தனை முறை மாட்டின் உரிமையாளர்களிடம் கூறினாலும், அவர்கள் தொடர்ந்து மாடுகளைச் சாலையில் அவிழ்த்து விடுகின்றனர். ஏற்கனவே அபராதம் அதிகரிக்கப்பட்டது, இருப்பினும் மாநகராட்சி சார்பில் பிடிக்கப்படும் மாடுகளை மீண்டும் உரிமையாளர்களிடம் கொடுக்கும் வகையில் சட்டங்கள் உள்ளன. மேலும், இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது" என்றார்.