அசுர வேகத்தில் வந்த கார்.. 50 மீட்டர் தூரம் தூக்கி எறியப்பட்ட பெண் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - கார் விபத்து
Published : Oct 4, 2023, 2:11 PM IST
|Updated : Oct 4, 2023, 2:51 PM IST
கோயம்புத்தூர்: வடகோவை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளியான வேல்முருகன். இவரது மனைவி லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
கென்னடி திரையரங்கு அருகே நடந்து சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி, ஒரு கார் மீது இடித்து, பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண், தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வடமாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகமாக வந்த கார் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.