திருவண்ணாமலை அருகே மான் வேட்டையாடும்போது குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு! - மான் வேட்டையாடுதல் எப்படி
Published : Nov 14, 2023, 11:56 AM IST
திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூர் தாலுகா, தென்மலை மற்றும் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், சக்திவாசன் உள்ளிட்ட நான்கு பேர் ஜவ்வாது மலைப்பகுதியில் மான் வேட்டைக்காகச் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது வனப்பகுதியில் மானை துப்பாக்கியால் சுட முயன்றபோது வேட்டைக்குச் சென்ற சக்திவேல் மீது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் பிரகாஷ் என்ற இளைஞர் முகத்தில் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், வனத்துறையிடமோ, காவல்துறையிடமோ தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த சக்திவேல் உடலை அடக்கம் செய்ய முயன்று உள்ளனர். அப்போது இந்த தகவல் ரகசியமாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த புதுப்பாளையம் மற்றும் ஜமுனாமரத்தூர் போலீசார், உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மான் வேட்டைக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உடன் சென்ற இரண்டு நபர்களை விசாரணைக்காக செங்கம் போலீசார் அழைத்து வந்துள்ளனர். இதில் தலைமறைவாகி இருக்கும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.