ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செய்த தவறு.. வீட்டின் முன்பு நின்றிருந்த நபர் பலி.. வேலூரில் நடந்தது என்ன? - gudiyatham near vellore
Published : Oct 23, 2023, 9:41 PM IST
வேலூர்: குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரத்தை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் என்பவர் வெட்டும் போது, அம்மரக்கிளை சரிவதைக் கண்ட லாரி ஓட்டுநர் மரக்கிளை லாரி மீது விழாமல் இருக்க லாரியை திருப்பி உள்ளார். அப்போது சாலையோரம் இருந்த வீடு மீது லாரி மோதியது.
இதில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநர் எழிலரசன் மற்றும் அவருடைய சகோதரர் முத்துப்பாண்டி ஆகியோர் மீது மோதியுள்ளது. அதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், எழிலரசன் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் எழிலரசனின் உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.
மேலும், படுகாயம் அடைந்த முகத்துப்பாண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அனுமதியின்றி சாலையோர மரத்தை வெட்டிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்யக்கோரி, எழிலரசனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் தமிழக - ஆந்திர எல்லையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.