உயிரை பறித்த வேகத்தடை.. தவறி விழும் வாகன ஓட்டிகள்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! - todays news
Published : Oct 4, 2023, 9:12 AM IST
கோயம்புத்தூர்: கொடிசியா பகுதி அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட வேகத்தடையை அறியாமல் பைக்கில் வந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், மேலும் பல வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். கோவை கொடிசியா பகுதியில், சந்திரகாந்த் (26) என்ற இளைஞர் சென்று கொண்டிருந்தபோது தனியார் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கு வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டிருந்தது தெரியாமல் வழக்கம்போல் வேகமாக வந்த சந்திரகாந்த், வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிறக் கோடு போடப்பட்டிருந்தால், இச்சம்பவம் நடைபெறாமல் இருந்திருக்கக் கூடும் எனவும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை போடப்பட்டிருப்பது தெரியாமல் பலர் கீழே விழுந்துள்ளனர். இந்நிலையில், காவல் துறையினர் அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றி, மேலும் அனுமதியின்றி மாநகராட்சி பகுதிகளில் வேகத்தடைகளை யாரும் அமைக்கக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அறிக்கை வெளியிட்டனர்.