திருவண்ணாமலை தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Published : Nov 5, 2023, 7:40 PM IST
திருவண்ணாமலை: அவலூர்பேட்டை புறவழிச்சாலை அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (நவ.4) இந்த தனியார்ப் பள்ளியில் மாணவ, மாணவிகள் இடையே சிறுதானியத்தால் செய்யப்படும் உணவுகள் குறித்தும், சிறுதானியத்தின் மகத்துவம் குறித்தும், வரவு செலவுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஒரு நாள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது.
கணித துறையின் சார்பில் நடைபெற்ற இந்த ஒரு நாள் விற்பனை அரங்கின் முக்கிய நோக்கம், பொருட்களை வாங்கும் போதும், விற்கும்போதும் எத்தகைய வருவாய் கிடைக்கிறது, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இளம் வயதிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்த அரங்கு துவக்க விழாவில், 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறு தானியங்களால் செய்யப்பட்ட இனிப்புகள், பிஸ்கட் வகைகள், உணவுப் பொருட்கள் மற்றும் சாமை, திணை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கையில் விளைந்த பொருட்களைக் கண்காட்சியில் வைத்து விற்பனை செய்தனர். இந்த பொருட்களை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.