ரூ.36,000 ஏலம் எடுக்கப்பட்ட ஒரு தேங்காய்: போடி சுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற சுவாரசியம்! - Subramaniya Swamy Temple
Published : Nov 19, 2023, 5:52 PM IST
தேனி: போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் கோயில் முருகன் திருக்கல்யாணத்தில் கந்த சஷ்டி பூஜை கலசத்தில் வைக்கப்பட்ட கலச தேங்காய் ரூபாய் 36,000 க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று முடிவடைந்ததையடுத்து திருக்கல்யாண விழா இன்று நடைபெற்றது. அதன்படி போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோயிலில் இன்று முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
முருகனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டுத் தங்கக் கவசம் சாத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருக்கல்யாணத்தைக் காணப் பக்தர்கள் அலைகடலெனத் திரண்டனர்.
திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் கலச பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஆலய நிர்வாகம் சார்பாக ரூபாய் 3,001 ல் தொடங்கப்பட்ட இந்த ஏலம் படிப்படியாக உயர்ந்து நிறைவாக ரூபாய் 36 ஆயிரத்திற்கு ஏலம் கேட்கப்பட்டது.
போடிநாயக்கனூர் குப்பிநாயக்கன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மதன் வீரன் என்பவர் ரூபாய் 36 ஆயிரத்து ஒன்றுக்குப் பூஜையில் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காயை ஏலம் எடுத்தார். வேள்வி பூஜையில் வைக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காயை வீட்டில் வைத்துப் பூஜிக்கும் போது பல்வேறு சுப காரியங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.