இன்னைக்கு ஒரு பிடி ..எல்லோரும் வாங்க..நெல்லையில் 1000 பேருக்கு சுடச்சுட தயாரான மட்டன் பிரியாணி - tamilnadu news
நெல்லை:பக்ரீத் திருநாளான இன்று நெல்லை மாநகரத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஒரே இடத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் போலவே பக்ரீத் பண்டிகையிலும் விருந்தில் முக்கிய இடம்பெறுவது, பிரியாணி. அதன்படி நெல்லை டவுன் பகுதியில் ஒரே இடத்தில் ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. ஒரு டபேராவில் 200 பேர் சாப்பிடும் அளவிற்கு பிரியாணி தயாரிக்கின்றனர். அப்படி ஐந்து முதல் ஆறு பிரியாணி டபேராக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தயார் செய்யப்பட்டது.
வெங்காயம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பட்டை, முந்திரி பருப்பு, பால், தயிர், கொத்தமல்லி, புதினா என மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருட்களை சேர்க்கின்றனர். தக்காளி விலை அதிகம் என்றாலும் பிரியாணிக்கு முக்கியம் என்பதால் அதனையும் தேவையான அளவு சேர்த்துக் கொண்டனர். உயர்ரக பாசுமதி அரிசியை பிரியாணிக்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் பிரியாணிக்கு உயர் ரக நெய் என தொடங்கி பல்வேறு பொருட்களும் தரமான நிறுவனப் பொருட்களை பயன்படுத்தி பிரியாணியை தயார் செய்தனர். முடிவில் தயாரான பிரியாணி பாத்திரத்தை மூடி வைத்து, அதன் மேல் நெருப்பு கனல்களைக் கொட்டி, கீழே அடுப்பை அணைத்து விட்டனர். காத்திருப்புக்குப் பின் பிரியாணி சுடச்சுட சாப்பிடும் பதத்திற்கு தயாராகி விடுகிறது.
பிரியாணியில் மட்டன் கறிக்காக செம்மறி ஆட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கறி செரிமானம் ஆவதற்காக தொடுகறியாக கத்திரிக்காய்களை பயன்படுத்தி தால்சா தயாரிக்கின்றனர். இதனுடன் ரொட்டிகளை கொண்டு பிரட் ஜாம் தயாரிக்கின்றனர். இவை இரண்டும் பிரியாணியில் உள்ள மட்டன் கறியை உடலுக்குள் வெகு சீக்கிரம் செரிமானம் செய்ய உதவுகிறது. இதுபோல் வெட்டி வைத்த வெங்காயத்துடன் தயிர் சேர்த்து தயிர் பச்சடியும் கண்டிப்பாக உணவில் துணை இருக்கிறது. பிரியாணி, கத்திரிக்காய், தால்சா, தயிர் பச்சடி என பக்ரீத் விருந்து களை கட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் பிரியாணியை வீட்டில் செய்ய முடியாத பலர் ஆர்டர்களாக கொடுத்தும் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடியா - ராகுல் காந்தியா.. மக்களே தீர்மானிப்பார்கள் - அமித் ஷா!