அண்ணாமலையார் கோயில் ஆடிக் கிருத்திகை காவடி: நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்கள் - Murugan
திருவண்ணாமலை:ஆடிக் கிருத்திகையையொட்டி பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு காவடி மற்றும் பால்குடங்கள் ஏந்தி மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.
திருவண்ணாமலையில் வடவீதி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அறுபடை முருகப்பெருமானின் பக்தர்கள், 2008 காவடிகள் ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்து முருகனை வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் உள்ள முருக பெருமானுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றம் ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் விரதமிருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள முருகர் சந்நிதியில் இருந்து ராஜகோபுரம் வழியாக 2008 காவடிகளை ஏந்தி பக்தர்கள் மாடவீதிகளில் வலம் வந்தனர். வீதியில் முருகருக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பி வலம் வந்தனர். இதில் பால் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்டப் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி பக்தர்கள் மாட வீதியில் வலம் வந்து முருகப்பெருமானையும், அண்ணாமலையாரையும் தரிசனம் செய்தனர்.